ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் 51ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக சிறப்பான முறையில் நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் கர்ணல் பேராசிரியர் டாக்டர் N.S.சந்தோஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். புதுச்சேரி குடும்ப நீதித்துறை முன்னாள் நீதிபதி கே.எஸ்.மோகன்தாஸ், தொழிலதிபர் பி.புகழ்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் ஆர்.செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராமலிங்கம், புதுச்சேரி UV குரூப்ஸ் உத்தரவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ஏபிஜிபி வடதமிழக மாநில தலைவர் கே.வெங்கட்ராமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். வடதமிழ்நாடு இணைச் செயலாளர் அர்ஜுன கிருஷ்ணாராம் துவக்க உரை நிகழ்த்தினார்.
புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜே.ரமேஷ் ஏபிஜிபி வேலை முறையும் வெற்றியும் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். தென் பாரத அமைப்பு செயலாளர் எம்.என்.சுந்தர் நிகழ்ச்சியின் அவசியம் குறித்து விரிவாக பேசினார். வட தமிழக மாநில செயலாளர் ஆர்.பசுபதி, மாநில பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்க வேண்டும், கல்வி நிறுவனங்களில் நுகர்வோர் குழுக்கள் ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும், உணவகங்களின் தரத்திற்கு ஏற்ப கிரேட் வழங்க வேண்டும், புதுச்சேரி நகர சாலை நெரிசலை கட்டுப்படுத்த ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் ஆர்.செல்வத்திடம் வழங்கப்பட்டது. அதற்கு சபாநாயகர் 4 தீர்மானங்களையும் புதுச்சேரி அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற உறுதிமொழி அளித்தார்.
முன்னதாக ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை ஒட்டி புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலத்தை புதுச்சேரி சிறப்பு அதிகாரி மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி டாக்டர் எஸ்.ராஜசேகர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் நுகர்வோர் பிரச்சனைக்கு ஏபிஜிபி இருக்கு, இயற்கை வளங்களை அழித்து சமூக குற்றவாளி ஆகாதே, உணவில் கலக்கும் சிறுதுளி நெகிழி உண்மையில் பெருந்தொற்று நோய்கள், நெகிழியை பயன்படுத்தாதே இயற்கையை பகைத்துக் கொள்ளாதே, சட்னி சாம்பாருக்கு பாத்திரம் நம் உயிர் என்றும் பத்திரம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக திருவண்ணாமலை காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்துவான் பி.டெல்லிபாபு குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி மற்றும் திருக்கண்டீஸ்வரர் இசைத்திரு கூட்டம் சிவ கிருஷ்ணராஜின் வரவேற்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. #ABGP #Consumer #Awareness #Rally #pondicherry